செவ்வாய், 14 ஜனவரி, 2014

உறவுகள் ஆயிரம்






யாயும் ஞாயும் யார் ஆகியரோ ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர் ?

யானும் நீயும் எவ் வழி அறிதும் ?

செம் புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
40    - குறுந்தொகை

யாயும் - என்னுடைய தாயும், ஞாயும் - நின் தாயும்,
யார் ஆகியர் -  ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்?
எந்தையும் -  என் தந்தையும், நுந்தையும் - நின் தந்தையும்,
எம் முறைக்கேளிர் -  எந்த முறையில் உறவினர?
யானும் நீயும் - இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் நீயும்,
வ் வழி அறிதும் - ஒருவரையொருவர், எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்புலம் பெயல் நீர் போல - செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல, அன்பு உடை நெஞ்சம் - அன்புடைய நம் நெஞ்சம், தாம் கலந்தன - தாமாகவே ஒன்றுபட்டன.

அன்பு இருக்கும் இடத்தில்தான் உறவு இறுகி நிற்கும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.
எனவே தமக்குரியர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது உறவு என்ற நெருக்கம் மறையத்தொடங்குகிறது.
 ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன
 வேரென நீயிருந்தாய்
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலில் குறிப்பிடப்படும் வேரின் நிலை இன்று என்ன என்பதைச்சிந்தித்துப்பார்க்க வேண்டும். கணவன் மனைவி உறவிலேயே அணுக்கம் குறையத்தொடங்கியுள்ளது.

சிறுகுடும்பப் பண்பாட்டு மற்றும் பொருளாதாரக் காரணங்களாலும், பணியின் காரணத்தினாலும், தன்னலம் அதிகரித்துள்ளதாலும் உறவுகளின் இறுக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாகத் தமிழில் உள்ள பல உறவுச்சொற்கள் தற்காலத்திலேயே மறையத்தொடங்கிவிட்டன. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ள வீடுகளில் அண்ணன், அக்காள், சித்தி, சித்தப்பா போன்ற சொற்கள் இனி கேட்காது. இப்பொழுதே மம்மி, டாடி, அங்க்கிள், ஆன்ட்டி என்ற சொற்கள் நகர்ப்புரங்களில் மட்டுமின்றி சிற்றூர்களிலும் கேட்கின்றன.

இப்பதிவில் நான் அறிந்த அளவு உறவுச்சொற்களைத்தந்துள்ளேன்.

அம்மா, தாய், அன்னை, ஆயா, ஆத்தா, செவிலி, யாய்
அப்பா, தந்தை, அத்தன், அண்ணன், அக்காள், தம்பி, தங்கை,

கணவன், மனைவி, இல்லாள், மனையாள், மருமகன், மருமகள், மாமனார், மாமியார்,
தாத்தா, பாட்டி, ஆச்சி, அம்மாச்சி, அம்மம்மா, அப்பத்தா, அப்பாயி,
பேரன்(பெயரன்), பேத்தி(பெயர்த்தி), கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்தி,
மாமா, அத்தை, மாமி, பெரியப்பா, பெரியம்மா,
சித்தி, சித்தப்பா, சின்னம்மா, அத்தான், அத்தாச்சி,
கொளுந்தன், கொழுநன், கொளுந்தி, நாத்தனார், ஓரகத்தி, ஓர்ப்படியாள், மாப்பிள்ளை, மைத்துனர், மைத்துனி, சக்காளத்தி, பாங்கன், பாங்கி

அத்தங்கா, அம்மங்கா, அத்திம்பேர், மன்னி, தோழன், தோழி,


இவை போக உள்ளவற்றை நீங்கள் பதிவில் இடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக