திங்கள், 20 ஜனவரி, 2014

      
நாராய் நாராய் செங்கால் நாராய்
 
     சங்க இலக்கியப் பாடல்களில், ஏழ்மையும் எழில்மிகு கவிநயத்தோடு கூறப்படுவதைக் காண்கிறோம். நான் இளம்அறிவியல் படித்த காலத்தில், பேராசிரியர் அமரர் சண்முகசுந்தரம் அவர்கள் மனம் ஒன்றி நடத்திய பாடல்களில் ஒன்று, சத்திமுத்துப்புலவரின் பாடலாகும்.  48 ஆண்டுகள் கடந்த பின்பும், இன்றுவரை மறக்க இயலாத வகுப்பறைப் பாடல்களில் அது ஒன்று. மாறன் என்ற பாண்டிய மன்னனின் கூடல் மாநகரில், வாடைக்காற்றிலே, போர்த்திக் கொள்ளத் துணியின்றி, கையால் மெய்யைப் போர்த்திக், கால்களை இழுத்து வயிற்றோடு மடக்கிச் சுருண்டு படுத்துப், பேழையுள் இருக்கும் பாம்பென மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் புலவர், வடதிசை நோக்கிச் செல்லும் நாரைகளைப் பார்த்து, சத்திமுத்தம் எனும் ஊரில், ஒழுகுகின்ற கூரையின் காரணமாக நனைந்திருக்கும் சுவரின் மீது இணைந்திருக்கும் பல்லியின் சொல்லுக்குக் காத்திருக்கும் தன் மனைவியிடம் தன் நிலை பற்றிக் கூறுமாறு பாடுகிறார்.

நாராய் நாராய் செங்கால் நாராய்





பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன



பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
      நீயும்நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
       ஏழையாளனைக் கண்டனம் எனுமே"
    

      இப்பாடலில் நாரையின் பவளக் கூர்வாய்க்கு பனங்கிழங்கை உவமை யாக்கியதில், பனங்கிழங்கைப் பிளக்கும் பொழுது தெரிகின்ற, அதன் உள்ளிருக்கும் நரம்பினை, நாரையின் நாக்கிற்குச் சொல்லாமற் சொல்லி உவமையாக்கும் அழகே அழகு. 


          இன்றும் புரிகின்ற சொற்களால் அமைந்துள்ள இப்பாடல்,
 என்றுமுள தென்தமிழ் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டல்லவா!!!