வியாழன், 20 பிப்ரவரி, 2014

இரட்டைக்கிளவி

குண்டக்க மண்டக்க, கண்ணா பிண்ணா, கெக்கெ பிக்கெ, சட்டுபுட்டுனு, என்று சில சொற்கள் எதுகையுடன் இரட்டித்து பேச்சு வழக்கில் பயன்பாட்டில் உள்ளன. சில  சொற்கள் தானே இரட்டித்துப் பொருள் தருவனவாக உள்ளன

ஒரு வாக்கியத்தில் ஒரு சொல் தனித்து வருகையில் பொருள் தராமல், இரட்டையாய் அடுக்கி வரும் பொழுது, பொருள் தரும் சொற்றொடர் இரட்டைக்கிளவி எனப்படும்.
          
         “இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா – தொல் 48

தன் பொருள் : இரட்டித்து நின்று பொருளுணர்த்துஞ் சொற்கள் இரட்டித்து நிற்றலில் பிரிந்து நில்லா 

எடுத்துக்காட்டுகள்: 
1.    டப்டப் எனத் துப்பாக்கி வெடித்தது
2.    பட்பட் என அறை விட்டான்
3.    டபடப என்ற ஒலியுடன் மோட்டார் சைக்கிள் சென்றது
4.    படபட என அவன் பேசினான்
5.    டம்டம் என முரசு ஒலித்தது
6.    டமடம என முரசு ஒலித்தது
     7.      மடமட என மரம்முறிந்தது  மடமட என ஒப்புவித்தான்
8.    கடகட எனச் சிரித்தான்
     9.     சடசட எனக் கட்டிடம் சரிந்தது
10.   தடதட என ஓடி வந்தான்
11.   தடக்தடக் என்ற ஒலியுடன் தொடர் வண்டி சென்றது
12.   மடக்மடக் என நீரைக் குடித்தான்
13.   படக்படக் என நெஞ்சு அடித்துக்கொண்டது
14.     கொடகொட எனக் குழாயில் நீர் கொட்டியது
15.     லொடலொட எனப்பேசுவான்
16.     மொடமொடப்பான உடை அணிந்து வந்தான்
17.     கடுகடு என்ற முகத்தோடு
18.     குடுகுடு கிழவர்
19.     கிடுகிடு பள்ளம்
20.     சிடுசிடு என எரிந்து விழுந்தான்
21.     கலகலப்பான பேச்சு
22.     சல்சல் எனச் சலங்கை ஒலி
23.     சளசள எனப் பேசிக்கொண்டிருந்தனர்
24.     சலசல எனக் கால்வாயில் நீர் ஓடிற்று.
25.   தளதள எனத் ததும்பும் பருவம்
26.   பளபள என மின்னியது
27.   மளமள என வேலையைச் செய்
28.   மழுமழு எனக் கன்னம் இருந்தது
29.   வள்வள் என நாய் குலைத்தது
30.   வளவள எனப் பேசாதே
31.   வழவழ எனத் தரை இருந்தது  
32.   பொலபொல எனக கண்ணீர் சிந்தினார்
33.   கொழகொழ என இருந்தது கூழ்
34.   கொழுகொழு என இருந்தது குழந்தை
35.   மொழுமொழு என இருந்தது குழந்தை
36.   பிலுபிலு எனப் பிடித்துக்கொண்டான்
37.   சிலுசிலு எனக் காற்று வீசியது
38.   கசகச என வேர்வை, கசகச என மக்கள் பேசிக்கொண்டு
39.   மசமச எனச் சோம்பியிராதே
40.   கமகம என மணந்தது முல்லை
41.   நமநம என நாக்கு அரித்தது
42.   கரகரத்த குரலில் பேசினான்
43.   வரவர என இருந்தது தோல்
44.   தரதர என இழுத்து வந்தான்
45.   சரசர எனப் பாமபு நகர்ந்தது
46.   பரபர என வேலையைப்பார்
47.   நறநற எனப் பல்லைக்கடித்தான்
48.   சொரசொர என இருந்தது தரை
49.   மொரமொரப்பான அப்பளம்
50.   மொறுமொறு என இருந்த முருக்கு
51.   பொரிப்பொரியாகக் கிளம்பியது
52.   கிறுகிறு என்று தலை சுற்றியது
53.   திருதிரு என விழித்தான்
54.   கிச்சுகிச்சு மூட்டினாள் பேத்தி
55.   கிசுகிசு ஒன்றை கேட்டேன்
56.   குப்குப் எனச்சென்றது புகைவண்டி
57.   கிளுகிளுப்பான காட்சி ஒன்று  பார்த்தாராம்
58.   தகதக என மின்னியது
59.   கீசுகீசு என குருவிகள் கத்தின
60.   குசுகுசு என்று காதில் சொன்னார்
61.   குபுகுபு எனக் குருதி கொட்டியது
62.   கும்கும் என்றும் குத்தினார்
63.   குளுகுளு உதகை சென்றேன்
64.   குறுகுறுத்தது குற்ற நெஞ்சம்
65.   சவசவ என்று முகம் சிவந்தது
66.   சாரைசாரையாக மக்கள் வந்தனர்
67.   சிலுசிலு எனக் காற்று வீசியது
68.   சுடசுடத் தோசை கொடுத்தாள்
69.   திக்குதிக்கு என நெஞ்சம் துடிக்கும்
70.   திடுதிடு என நுழைந்தான்
71.   திபுதிபு என மக்கள் புகுந்தனர்
72.   திருதிரு என விழித்தான்
73.   துறுதுறு என்ற விழிகள்
74.   தைதை என்று ஆடினாள்
75.   தொளதொள எனச் சட்டை அணிந்திருந்தார்
76.   நங்குநங்கு எனக் குத்தினான்
77.   நணுகுநணுகு எனும் அளவில் அச்சம் மேலிட
78.   நைநை என்று தூரல் விழுந்துகொண்டிருந்தது
79.   நொகுநொகு (நெகுநெகு) என்று மாவை அரைத்தாள்
80.   பக்பக் என்று நெஞ்சு அடிக்கும்
81.   படபட என இமைகள் கொட்டும்
82.   பரபரப்பு அடைந்தது ஊர்
83.   பிசுபிசுத்தது போராட்டம்
84.   பேந்தப்பேந்த விழித்தான்
85.   பொதபொத என இருந்தது பன்றியின் வயிறு
86.   பொலபொல என வடித்தாள் கண்ணீர்
87.   மங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா?
88.   மசமச என்று நிற்காதே
89.   மடமட என நீரைக் குடித்தார்
90.   மலங்க மலங்க விழித்தான்
91.   மள மள என எல்லாம் நிகழ்ந்தது
92.   மாங்குமாங்கு என்று உழைப்பார்
93.   மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்)
94.   முணுமுணுத்து அவர் வாய்
95.   மொச்சுமொச்சு என்று தின்றார்
96.   மொசுமொசு என இருந்த புதர்
97.   மொலு மொலென்று அரிக்கிறது சிரங்கு
98.   லபக்லபக் கென்று முழுங்கினார்
99.   லபலப என்று அடித்துக் கொண்டாள்
100. லபோலபோ என அடித்துக் கொண்டாள்
101. வடவட என வேர்த்தன கைகள்
102. வதவத என ஈன்றன் குட்டிகள்
103. வழவழ என்று பேசினாள் கிழவி
(வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” -                                                                                                                                 திருப்புகழ்)
104. விக்கி விக்கி அழுதது குழந்தை
105. விசுவிசு என்று குளிர் அடித்தது
106. விறுவிறுப்பான காட்சி அமைப்பு
107. வெடவெட என நடுங்கியது உடல்
108. வெடுவெடு என நடுங்கினாள்
109. வெதுவெதுப்பான நீரில் குளித்தாள்
110. வெலவெல என்று நடுங்கினேன்.
111. சுருசுருத்தது,
112. மொடுமொடுத்தது 

விடுபட்ட  இரட்டைக்கிளவிகளை நீங்கள் இடலாமே

திங்கள், 20 ஜனவரி, 2014

      
நாராய் நாராய் செங்கால் நாராய்
 
     சங்க இலக்கியப் பாடல்களில், ஏழ்மையும் எழில்மிகு கவிநயத்தோடு கூறப்படுவதைக் காண்கிறோம். நான் இளம்அறிவியல் படித்த காலத்தில், பேராசிரியர் அமரர் சண்முகசுந்தரம் அவர்கள் மனம் ஒன்றி நடத்திய பாடல்களில் ஒன்று, சத்திமுத்துப்புலவரின் பாடலாகும்.  48 ஆண்டுகள் கடந்த பின்பும், இன்றுவரை மறக்க இயலாத வகுப்பறைப் பாடல்களில் அது ஒன்று. மாறன் என்ற பாண்டிய மன்னனின் கூடல் மாநகரில், வாடைக்காற்றிலே, போர்த்திக் கொள்ளத் துணியின்றி, கையால் மெய்யைப் போர்த்திக், கால்களை இழுத்து வயிற்றோடு மடக்கிச் சுருண்டு படுத்துப், பேழையுள் இருக்கும் பாம்பென மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் புலவர், வடதிசை நோக்கிச் செல்லும் நாரைகளைப் பார்த்து, சத்திமுத்தம் எனும் ஊரில், ஒழுகுகின்ற கூரையின் காரணமாக நனைந்திருக்கும் சுவரின் மீது இணைந்திருக்கும் பல்லியின் சொல்லுக்குக் காத்திருக்கும் தன் மனைவியிடம் தன் நிலை பற்றிக் கூறுமாறு பாடுகிறார்.

நாராய் நாராய் செங்கால் நாராய்





பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன



பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
      நீயும்நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
       ஏழையாளனைக் கண்டனம் எனுமே"
    

      இப்பாடலில் நாரையின் பவளக் கூர்வாய்க்கு பனங்கிழங்கை உவமை யாக்கியதில், பனங்கிழங்கைப் பிளக்கும் பொழுது தெரிகின்ற, அதன் உள்ளிருக்கும் நரம்பினை, நாரையின் நாக்கிற்குச் சொல்லாமற் சொல்லி உவமையாக்கும் அழகே அழகு. 


          இன்றும் புரிகின்ற சொற்களால் அமைந்துள்ள இப்பாடல்,
 என்றுமுள தென்தமிழ் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டல்லவா!!!